சின்னசேலம் ஏாி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி


சின்னசேலம் ஏாி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 Jan 2021 2:09 AM GMT (Updated: 22 Jan 2021 2:09 AM GMT)

சின்னசேலம் ஏாி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சின்னசேலம், 
சின்னசேலம் நகரை ஒட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் சின்னசேலம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பருவமழை காரணமாக மோமுகி அணை நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் பாசன வாய்க்கால் மூலம் வனப்பகுதி வழியாக கடத்தூர், தெங்கியானத்தம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள  ஏரிகளுக்கு சென்றது. இதனால் அந்த ஏரிகள் முழுமையாக நிரம்பியது. அதனை தொடர்ந்து அங்கிருந்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்லும் வகையில்,  இணையும் கைகள் என்ற அமைப்பினர்  ஏரிக்கு வரும் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்தனர். இதன் காரணமாக ஏரிக்கு தங்கு தடையின்றி கடந்த 20 நாட்களாக தண்ணீர் சென்றது. தற்போது ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது.   இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏரி நிரம்ப வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறப்பு பூஜை செய்தனர். இந்த ஏரி நிரம்பியதன் மூலம்  ராயர்பாளையம், பெத்தானூர், ஈசாந்தை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறப்பு பூஜையின் போது  பாசன சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள், மற்றும் சின்ன சேலம் நகர அனைத்து வணிகப்பெருமக்கள், விவசாயிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால், அதனை ஏராளமான மக்கள்  பார்த்து ரசித்து வருகின்றனர். 

Next Story