திருப்பத்தூர் அருகே உள்ள சுரங்க தொழிற்சாலையில் பொது நிறுவன குழு ஆய்வு


திருப்பத்தூர் அருகே உள்ள சுரங்க தொழிற்சாலையில் பொது நிறுவன குழு ஆய்வு
x
தினத்தந்தி 22 Jan 2021 5:09 PM IST (Updated: 22 Jan 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனம் டாமின் வெர்மிகுலைட் சுரங்க தொழிற்சாலையில் பொது நிறுவன குழு ஆய்வு செய்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி கிராமம் அருகே மைக்காமேடு என்ற பகுதியில் தமிழக அரசின் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் டாமின் வெர்மிகுலைட் (மைக்கா) சுரங்கத் தொழிற்சாலை தொடர்பாக சட்டமன்றத்தில் திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. மேற்கண்ட தொழிற்சாலை அருகில் 50 ஆண்டுகளாக 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு பட்டா கேட்டபோது தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்று கூறுவதாகவும், காக்கங்கரை ரெயில் நிலையத்தில் இருந்து கொரட்டி செல்லும்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான சாலை உள்ளதாகவும், அதேபோல் காக்கங்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் மங்கம்மா சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான சாலை உள்ளதாகவும், அதில் சாலை அமைக்க முயன்றபோது கனிம நிறுவனத்தின் ஒப்புதல் தர வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்கள், எனக் கேட்டதற்கு சட்டசபையில் அப்போதைய தமிழ்நாடு கனிமவள நிறுவன மேலாண்மை இயக்குனர் பொது நிறுவன குழு ஆய்வு செய்யும், எனத் தெரிவித்தார்.

அதையொட்டி கனிம வள மேலாண்மை இயக்குனர் பிருந்தாதேவி, பொது நிறுவன ஆய்வுக்குழு உறுப்பினர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ, சென்னை பொது மேலாளர் ஹென்ரிராபர்ட், திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க், வருவாய்த்துறையினர், கனிமவள அதிகாரிகள் நேரில் சென்று சுரங்கத் தொழிற்சாலை மற்றும் அருகில் கட்டப்பட்டுள்ள வீடுகள், கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான சாலைகள் ஆய்வு செய்தனர்.

அப்போது மேலாண்மை இயக்குனர் பிருந்தாதேவி நிருபர்களிடம் கூறியதாவது:-

பூமியில் இருந்து தானாகக் கிடைக்கும் டாமின் வெர்மிகுலைட் (மைக்கா) வெட்டி எடுத்து இந்தத் தொழிற்சாலை மூலம் மொட்டை மாடிகளில் மேற்கூரையில் வெப்பத்தைத் தடுக்க வெர்மிடைல் ஓடுகளாகவும், கான்கிரீட் மேற்கூரையின் நீர்க்கசிவைத் தடுக்கவும், நிலங்களில் மண்ணுடன் கலந்து உபயோகித்தால் செடிகள் வேர்களில் காற்றோட்டத்தை, ஈரப்பதத்தை அளித்து விரைவாக செடிகளின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும், மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றில் கலந்து செடிகளின் வேர்களில் உரமாக இடலாம்.

தொழிற்சாலை 30 ஏக்கரில் அமைந்துள்ளது. இது, லாப நோக்கில்லாமல் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையை ஆய்வு செய்து உள்ளோம். தொழிற்சாலை நிலத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பட்டா கேட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களிடம் மனு எழுதி வாங்கி உள்ளோம். மேலும் தொழிற்சாலைக்கு இடையே உள்ள சாலையை தார் சாலையாக மாற்ற விரைவில் உத்தரவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் கனிமவள போர்மேன் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story