சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200 இடங்களை கைப்பற்றும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200 இடங்களை கைப்பற்றும் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் மற்றும் அருப்புக்கோட்டை நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆ.ரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைகோட்டை எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. நகர் செயலாளர் சக்திபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் மோகன் வேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராமர் வரவேற்று பேசினார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் கூடும் பகுதிக்கு நேரடியாக சென்று திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலைக்கு ஓட்டு கேளுங்கள்.
தற்போது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவோம் எனக் கூறுகிறார்களே தவிர, கருணாநிதி ஆட்சியை தருவோம் என யாரும் கூறவில்லை. கிராமசபை கூட்டம், சைக்கிளில் சென்று பிரசாரம் நடத்தி ஸ்டாலின் பொதுமக்களிடம் பொய்யான வார்த்தைகளை கூறி வருகிறார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கட்சி தி.மு.க., காங்கிரஸ். தி.மு.க.விற்கு பொதுமக்கள் யாரும் விரும்பி ஓட்டுப்போடவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் ஏற்கனவே 3 முறை தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஆனால் அ.தி.மு.க.விற்கு பொதுமக்கள் விரும்பி ஓட்டு போடுகின்றனர்.
தமிழகத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை வாங்கித்தந்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க., பறிக்கின்ற கட்சி தி.மு.க.. வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 200 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபதி அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு வேல் பரிசு வழங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவன் ஆகியோருக்கு வீரவாளை பரிசாக வழங்கினார்.
சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, சாத்தூர் நகர் செயலாளர் இளங்கோ, மாவட்ட துணைச்செயலாளர் இந்திரா கண்ணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன்ராஜ், மாணவரணி ஒன்றிய செயலாளர் சாமுவேல், ஒன்றிய அவைத்தலைவர் அசோக் வேலுச்சாமி, ஜெயராகவன் உள்பட விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story