ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ - ஆவணங்கள் எரிந்து நாசம்


ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் திடீர் தீ - ஆவணங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Jan 2021 8:30 PM IST (Updated: 22 Jan 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு காவலர் பழனி பணியில் இருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென்று அலுவலகத்தின் கடைசி பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே காவலர் பழனி எழுந்து பார்த்தபோது அலுவலகத்திற்குள் தபால் அனுப்பும் பிரிவு அமைந்துள்ள பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தார்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முதன்மை கல்வி அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்தனர். அதற்குள் தபால் அனுப்புதல் பிரிவில் இருந்த ஏராளமான தபால்கள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

2 மர பீரோவில் தீப்பற்றி அதனுள் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களும், தபால்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்த 5 கணினிகள், மேசை, நாற்காலிகள், மின் விசிறிகள் முதலியவையும் எரிந்து சேதமானது. மின்சார பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து உரிய மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து நடந்த பகுதியில் ஏற்கனவே முடிவுக்கு வந்த நிகழ்வுகளின் ஆவணங்கள் மட்டுமே இருந்ததாகவும், நடப்பு விசாரணை மற்றும் நிகழ்வு தொடர்பான எந்த முக்கிய ஆவணங்களும் இல்லை என்றும் கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். நள்ளிரவில் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story