இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும் - கலெக்டர் ராமன் பேச்சு
இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது. இந்த மாதம் பெய்த மழையின் காரணமாக பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும்.
சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம், சோளத்தட்டு நறுக்கும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 வாடகையிலும், விவசாய பணிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 வாடகை என திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மழைநீர் வீணாகாமல் தடுப்பதற்கு ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்தையும் தூர்வாரி கரைகளை செம்மைப்படுத்த குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், காய்கறிகள் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 673 ஹெக்டரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 70 ஆயிரத்து 623 ஹெக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், இணை இயக்குனர் கணேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர்.டி.புருஷோத்தமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சத்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story