கரூர் செட்டிப்பாளையம் பூங்கா சீரமைப்பு


செட்டிப்பாளையம் பூங்காவில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்களை படத்தி்ல் காணலாம்.
x
செட்டிப்பாளையம் பூங்காவில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்களை படத்தி்ல் காணலாம்.
தினத்தந்தி 22 Jan 2021 10:00 PM GMT (Updated: 22 Jan 2021 5:32 PM GMT)

கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் பூங்காவை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்

கரூர்:

கரூர் மாவட்ட காவல் துறை மற்றும் அப்பிப்பாளையம், தாளப்பட்டி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் இணைந்து கரூரை அடுத்த செட்டிப்பாளையம் தடுப்பணையில் உள்ள பூங்காவை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் சுக்காலியூரை அடுத்த செட்டிப்பாளையத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையை ஒட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்களுக்கான பூங்காவும் அமைக்கப்பட்டது. அப்போது கரூர் நகர் பகுதிகளில் இருந்தும், அணையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து சென்றனர். காலப்போக்கில் இந்த பூங்கா பராமரிக்காமல் முட்செடிகள் முளைத்தும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.

இதனை அறிந்த கரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் அப்பிப்பாளையம், தாளப்பட்டி ஊர்பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று காலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 160 காவல் துறையினர், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து பூங்காவிற்குள் முளைத்திருக்கும் செடி, கொடிகளையும் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களை பழுது நீக்கும் பணிகள், இருக்கைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன. 

வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தொடங்கி வைத்து கூறுகையில், பொதுமக்கள், காவல் துறையினர் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

Next Story