டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை
திருவெண்ணெய்நல்லூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தீக்குளிப்போம் என்று கூறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஏரளுர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் கரடிபாக்கம் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு, அதை திறப்பதற்கான ஏற்பாட்டில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து, கடை மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
அப்போது இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் தேவையில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும் இந்த வழியாக வயல்வெளிகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விகுறியாகிவிடும். எனவே தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவெண்ணெய்நல்லூர் (பொறுப்பு) ராமதாஸ், விழுப்புரம் டவுன் ராதாகிருஷ்ணன், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் உள்பட ஏராளமான போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து போகுமாறு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது எதிர்ப்பை மீறி கடையை திறந்தால் தீக்குளிப்போம் என்று கிராம மக்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து போலீசார், டாஸ்மாக் மேலாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தற்போது கடையை திறக்கவில்லை என்று உறுதியளித்தார். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கடையை திறக்க வந்த அதிகாரிகளும் திரும்பி சென்றனர். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை விலக்கி கொண்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story