நாற்காலியால் தந்தை அடித்துக்கொலை


நாற்காலியால் தந்தை அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2021 3:30 AM IST (Updated: 22 Jan 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில நாற்காலியால் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் 

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் பரசுராமன்(வயது 55). சமையல் தொழிலாளி. இவருடைய மனைவி தேவகி. இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி என்ற மகளும், விக்னேஷ்(24), சக்திவேல் (20) ஆகிய 2 மகன்களும்  உள்ளனர். புவனேஸ்வரி திருமணமாகி கணவருடன் அவிநாசியில் வசித்து வருகிறார். 
விக்னேஷ், புதுச்சேரி தவளக்குப்பத்தில் தங்கி கொத்தனாராகவும், சக்திவேல் கடலூர் துறைமுகத்தில் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவகி, தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பரசுராமன் தனது 2-வது மகன் சக்திவேலுடன் வீட்டில் இருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரசுராமனும், சக்திவேலும் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் சக்திவேல் திடீரென வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த தந்தை பரசுராமனை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். இதனை தொடர்ந்து சக்திவேல், எதுவும் தெரியாததுபோல் வீ்ட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். 

இதற்கிடையே அவிநாசியில் இருந்து தேவகி நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அங்கு கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பரசுராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி் வைத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், மகனே தந்தையை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதே தெருவில் சுற்றித்திரிந்த சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் எதற்காக அவர் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story