பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் திடீர் திருப்பம் மந்திரி தனஞ்செய் முண்டே மீதான கற்பழிப்பு புகாரை பாடகி திரும்ப பெற்றார்


பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் திடீர் திருப்பம் மந்திரி தனஞ்செய் முண்டே மீதான கற்பழிப்பு புகாரை பாடகி திரும்ப பெற்றார்
x
தினத்தந்தி 22 Jan 2021 9:46 PM GMT (Updated: 22 Jan 2021 9:46 PM GMT)

மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய மந்திரி தனஞ்செய் முண்டேக்கு எதிராக அளித்த கற்பழிப்பு புகாரை பாடகி வாபஸ் பெற்றார்.

மும்பை,

மராட்டிய மாநில சமூகநீதித்துறை மந்திரியாக இருப்பவர் தனஞ்செய் முண்டே. இவர் மீது கடந்த 11-ந் தேதி மும்பை போலீசில் பாடகி ஒருவர் கற்பழிப்பு புகாரை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் அவரின் குற்றச்சாட்டை மந்திரி மறுத்தார். தன்னை மிரட்டுவதற்காகவே புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

அதே நேரத்தில் புகார் அளித்த பாடகியின் சகோதரியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த உறவின் மூலம் அப்பெண்ணுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தனது மனைவி, குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

பதவி நீக்க வலியுறுத்தல்

இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கிய மந்திரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது. இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவந்த பிறகு தான் தனஞ்செய் முண்டே மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

மேலும் மந்திரிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பாடகி மிரட்டி பணம் பறிப்பவர் என பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

புகாரை திரும்ப பெற்றார்

இதற்கிடையே பாடகி அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். புகார் அளித்த பாடகியும் ஒஷிவாரா போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்து இருந்தார்.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக மந்திரி தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக கற்பழிப்பு குற்றச்சாட்டை தெரிவித்த பாடகி, தனது புகாரை வாபஸ் பெற்று உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மந்திரி மீது அளித்த புகாரை சம்பந்தப்பட்ட பெண் திரும்ப பெற்று கொண்டார். ஆனால் அதற்கு எந்த காரணத்தையும் கூறவில்லை. எனவே புகாரை வாபஸ் பெற்றது தொடர்பாக சட்டப்படியான மனுவை சமர்பிக்குமாறு அவரிடம் தெரிவித்து உள்ளோம்" என்றார்.

சரத்பவார் கருத்து

இந்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை காத்திருக்கலாம் என கட்சி எடுத்து இருந்த முடிவு சரியாகி உள்ளது" என்றார்.

Next Story