வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்ஜினீயருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடலூா்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 61) . இவரது மகன் வேலு (35) . என்ஜினீயரிங் படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். இவரும், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோரணப்பட்டை சேர்ந்த ஜோதிலட்சுமி (27) என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 20.6.2016 அன்று குறிஞ்சிப்பாடி அருகே ஆபத்தாரணபுரத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடி வேலுவின் வீட்டில் வசித்து வந்தனர்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே வேலு, ஜோதிலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். இதற்கு அவரது தந்தை கணேசன், தாய் செல்வம்மாள் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இதையடுத்து ஜோதிலட்சுமி, தனது அக்காள் கற்பக ஜோதி மூலமாக பெற்றோரிடம் 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் வாங்கி, வேலுவிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே ஜோதிலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு வேலு, கணேசன், செல்வம்மாள் ஆகியோர் பெண் குழந்தை பிறந்ததால், ஜோதிலட்சுமியை திட்டி, மீண்டும் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமைப்படுத்தினர்.
தற்கொலை
இதில் மனமுடைந்த ஜோதிலட்சுமி கடந்த 29.9.2017 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஜோதிலிங்கம், குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலு, கணேசன், செல்வம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
7 ஆண்டு சிறை
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட வேலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் கணேசன், செல்வம்மாள் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story