தாராபுரத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கண்டித்து கடையடைப்பு


தாராபுரத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கண்டித்து கடையடைப்பு
x
தினத்தந்தி 23 Jan 2021 4:33 AM IST (Updated: 23 Jan 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் நகைக்கடை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர் போலீசாரிடம் பொய்யான தகவலை கொடுப்பதை கண்டித்து தாராபுரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பண மோசடி

தாராபுரம் சின்னக்கடை வீதியை சேர்ந்த பலராமன் என்பவரது மகன் அரிகரன். இவர் தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது ஏலச்சீட்டு நடத்தி அந்த தொகைக்கு ஏற்ப நகை தருவதாக கூறி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் நகைச்சீட்டு பணம் கட்டியவர்களுக்கு நகை கொடுக்காமல் நகைக்கடையை திடீரென ஹரிகரன் மூடிவிட்டு தலைமறைவானார்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் திருச்சியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஹரிஹரன் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து விடுதி உரிமையாளர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பின்னர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிஹரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நகைக்கடைக்காரர்கள் புகார்

இந்த விசாரணையின்போது தாராபுரம் பகுதியில் இயங்கிவரும் 6 நகைக் கடைகளில் வரவு செலவு செய்ததாக போலீசாரிடம் ஹரிகரன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அரிகரனை 20-ந் தேதி தாராபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவருடைய வீடு, தானிய மண்டி மற்றும் தாராபுரத்தில் உள்ள வேறு சில நகைக் கடைகளுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். 
அப்போது தாராபுரம் பகுதியில் பொதுமக்களிடம் சீட்டு பணமாக வசூல் செய்த தொகையை தங்கமாக மாற்றி நகைக் கடைகளுக்கு கொடுத்ததாக சில கடைகளை போலீசாரிடம் காண்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நகை கடைக்காரர்கள் ஒன்றிணைந்து 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். 

கடையடைப்பு

இதைத்தொடர்ந்து தாராபுரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர், தங்கள் கடைகளை அடைத்து தாராபுரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் போலீசாரிடம் தவறான தகவலை தெரிவித்து வரும் நகைக்கடை உரிமையாளர் அரிகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியும் அவர் சொல்லும் பொய்யான தகவல்களை காவல்துறையினர் நம்ப வேண்டாம் எனவும், அப்படி கொடுத்த வரவு செலவு ஆதாரத்துடன் இருந்தால் நகைக்கடை உரிமையாளர் சங்கமே சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து வாங்கி அரிகரனுக்கு கொடுத்து விடுவோம்., அப்படி இல்லாத பட்சத்தில் இவர் வேண்டுமென்றே தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையினரிடம் பொய்யான தகவலை தெரிவிப்பதாக கூறி நேற்றும், இன்றும் என 2 நாட்களுக்கு நகைக்கடை உரிமையாளர் அரிகரனை கண்டித்து 44 நகைக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகை வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் நகைக் கடைகளின் முன்பு வெகு நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றதால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story