கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்


கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 Jan 2021 4:47 AM IST (Updated: 23 Jan 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

சினிமா துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. அவருக்கான சிகை அலங்காரத்துடன் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். சிறிய, சிறிய காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தில் முன்னணி நடிகை நயன்தாராவுடன் கதாநாயகன் பாத்திரத்துக்கு இணையாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
அவருடன் இணைந்து நடித்த பாடல் காட்சி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அந்த பாடல் பிரபலமாகி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருக்கும் யோகிபாபு நேற்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலுக்கு திடீரென வருகை தந்தார்.

சாமி தரிசனம்
ஆனால் அவரை முதலில் யாரும் கவனிக்கவில்லை. இதனால் அவர் பொதுமக்களோடு நின்று கோவிலுக்குள் சென்று தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர் அவர் விநாயகர், பாடலீஸ்வரரை தரிசனம் செய்தார். தொடர்ந்து பல்வேறு சன்னதிகளுக்கு சென்று வழிபட்ட அவர் கோவிலை விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள், அங்கு கடை வைத்திருக்கும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அவருடன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தவர்கள் யோகிபாபுவுடன் நிற்கும் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
சற்று நேரத்தில் நடிகர் யோகிபாபு கோவிலுக்கு வந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் அவரை காண ஏராளமானோர் கோவிலுக்கு வரத்தொடங்கினர். இதையடுத்து அவர் அவசரம், அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதை அறியாத சிலர் அவரை காண கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் பார்க்க முடிந்தது.

Next Story