அலகுமலையில் வருகிற 31-ந் தேதி ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் கலெக்டர் அறிவிப்பு
திருப்பூரை அடுத்த அலகுமலையில் வருகிற 31-ந் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் மாடுபிடிவீரர்கள், விழா குழுவினர், அனைத்து துறை அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரை அடுத்த அலகுமலையில் வருகிற 31-ந் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் மாடுபிடிவீரர்கள், விழா குழுவினர், அனைத்து துறை அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு
திருப்பூரை அடுத்த அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் வருகிற 31-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அமைப்பாளர்கள், முன்பே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் குறித்த விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும். விதிகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வருவாய்த்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்வார்கள். குழுவினரின் ஆய்வுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா நிகழ்வு முழுவதையும் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்தும், காப்பீடு செய்த விவரத்தை உறுதிமொழி படிவத்தில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும்.
போலீசார் வழக்கு
காளைகள் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். மூன்று வயதுக்கும் குறைவாக 15 வயதுக்கு மேற்பட்ட காளைகளை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இரட்டை தடுப்புகளுடன் பார்வையாளர் அரங்கத்தை உறுதியாக அமைக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் ஆம்புலன்சுகளை மருத்துவத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
காளைகள் துன்புறுத்தப்படும்போது அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது போலீசார் தாமாகவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள் நிறுத்தும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். திடல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதி செய்ய வேண்டும்.
கொரோனா பரிசோதனை
காளைகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காளையின் உரிமையாளர், உதவியாளர் ஆகியோர் மட்டுமே காளையுடன் இருக்க முடியும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு அனுமதி இல்லை. மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை 300-க்குள் இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் அனைவரும் விழா நடைபெறும் நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். நோய்தொற்று இல்லாத வீரர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை முன்னதாக ஆய்வு செய்து, விழாவிற்காக அமைக்கப்படும் பார்வையாளர்கள் மாடம், இரட்டை தடுப்பு வேலி மற்றும் மக்கள் அதிகமாக கூடி நின்று விழாவை காண முயற்சிக்கும் இடங்கள் ஆகியவை கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் உரிய சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் மற்றும் விழாவில் தொடர்புடைய துறை அலுவலர்கள் அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன், இணை இயக்குனர் (பொது சுகாதாரம்) பாக்கியலட்சுமி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ஜெகதீசன், தாசில்தார்கள் சுந்தரம் (திருப்பூர் தெற்கு) , மகேஸ்வரன் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story