சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்


சுங்கசாவடி வழியாக செல்லாமல் கிராமங்கள் வழியாக சுற்றி சென்ற ஆசாமி: தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார்
x

தாம்பரத்தில் திருடிய 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டையில் மீட்ட போலீசார், அவற்றை திருடியவரை கைது செய்தனர். அந்த வாகனங்களை போலீசாரிடம் சிக்காமல் இருக்க சுங்கசாவடி வழியாக செல்லாமல் அதையொட்டி உள்ள கிராமங்கள் வழியாக கொண்டு சென்றது தெரிந்தது.

2 வாகனங்கள் திருட்டு
சென்னை மேற்கு தாம்பரம், சிவராஜ் தெருவை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய லோடு வேன் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருட்டுபோனது. அதேபோல நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவரது டெம்போ டிராவலர் வேனும் கடந்த 10-ந் தேதி தாம்பரத்தில் திருட்டு போனது.

இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் உக்கிரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து 2 வாகனங்களும் திருட்டுபோன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடப்பட்ட வாகனங்கள் செங்கல்பட்டு நோக்கி சென்றது தெரியவந்தது.

கிராமங்கள் வழியாக...
இதையடுத்து தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி வழியாக திருட்டுபோன வாகனங்கள் செல்லாதது தெரிந்தது.

இதனால் அதற்கு முன்பாக உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த வாகனங்கள் சுங்கசாவடியை சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக சுற்றிச்சென்று சுங்கசாவடியை தாண்டியவுடன் மீண்டும் சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக திருடிச்சென்றது தெரிந்தது.

இவ்வாறு தாம்பரத்தில் இருந்து பாளையங்கோட்டை வரை அந்த வாகனங்கள் எந்த ஒரு சுங்கசாவடி வழியாகவும் செல்லாமல் அதையொட்டி உள்ள கிராமங்கள் வழியாக சுற்றிச்சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
ஒருவழியாக பாளையங்கோட்டை, ரஹ்மத் நகர் பகுதியில் போலீசார் அந்த 2 வாகனங்களையும் கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாகனங்களை திருடிய மரியஜோசப் சேவியர் (வயது 43) என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

விசாரணையில் சுங்கசாவடி வழியாக சென்றால் போலீசார் எளிதில் பிடித்து விடுவார்கள் என்பதால் ஒவ்வொரு சுங்கசாவடி உள்ள பகுதியின் முன்பாகவே கிராமங்களின் உள்ளே சென்று பாளையங்கோட்டை வரை சென்றது தெரிந்தது.

கைதான மரிய ஜோசப் சேவியர், தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாம்பரத்தில் திருட்டு போன 4 சக்கர வாகனங்களை பாளையங்கோட்டை வரை இரவு-பகல் பராமல் தேடிச்சென்று மீட்டதுடன், சாமர்த்தியமாக திருடனை பிடித்து வந்த தனிப்படை போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Next Story