கிடப்பில் போடப்பட்டுள்ள திருப்போரூர்- செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கிடப்பில் போடப்பட்டுள்ள திருப்போரூர்-செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையாக மாற்றம்
திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 27 கிமீ தூர இரு வழிச்சாலை ரூ.117 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படுகிறது.
75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திடீரென சாலை அமைக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
விபத்துகள் ஏற்படுகிறது
இதனால் திருப்போரூர், செம்பாக்கம், ரெட்டிக்குப்பம், முள்ளிப்பாக்கம் போன்ற இடங்களில் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளன. பல இடங்களில் மரங்களை அகற்றாமலும், மின் கம்பங்களை அகற்றாமலும் விடப்பட்டுள்ளது. இதையொட்டி, சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்வோருக்கு சாலையின் பல இடங்களில் அரைகுறையாக பள்ளங்களும், மேடுகளும் அப்படியே விடப்பட்டுள்ளதால் வாகனங்களை ஓட்டிச்செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலைப்பணி அரைகுறையாக விடப்பட்டுள்ள இடங்களிலும், மின் கம்பங்கள் அகற்றப்படாத இடங்களில் எந்த வித எச்சரிக்கை பலகைகளோ, அறிவிப்புகளோ வைக்கவில்லை.
கோரிக்கை
மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலைப்பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும்.அதற்கு தடையாக உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story