நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது


நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்
x
நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்
தினத்தந்தி 23 Jan 2021 7:58 AM IST (Updated: 23 Jan 2021 7:58 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசு நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 
தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ், குழுவின் துணைத் தலைவரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கீழ்‌ நடந்து வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.பி.சின்ராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் கேட்டறிந்தனர். அதேபோல் கிராமப்புற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 1,236 வீடுகள் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

உறுதுணையாக இருக்க வேண்டும்
மேலும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடந்து வரும் பணிகள், சமூக பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர். பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தினர்.

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த காலத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெறுவதற்கு அரசு அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, மகளிர் திட்ட அலுவலர் டாக்டர் மணி, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story