கேசர்குளி அணையின் உபரி நீரை ஏரிகளுக்கு வழங்க கால்வாய் அமைக்கும் பணி; அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
பாலக்கோடு தாலுகா கேசர்குளி அணையின் உபரி நீரை 3 ஏரிகளுக்கு வழங்க பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் ரூ.29.60 லட்சம் மதிப்பில் புதிய பிரிவு கால்வாய் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு உதவி கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பணியை தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-
கேசர்குளி அணையில் வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை திருமால்வாடி ஏரி, கோட்டூர் ஜெர்தலாவ் ஏரி மற்றும் தாசன் ஏரி ஆகிய 3 ஏரிகளுக்கு வழங்கிடும் வகையில் புதிய கால்வாய் அமைக்க விவசாயிகள் கோரிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைக்கும்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 15 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
இந்தப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, விமலன், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் கோபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், காரிமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், அரசு வக்கீல் செந்தில் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story