காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மழையால் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகையிட்டு போராட்டம்
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு மழையால் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
அப்போது விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனைதொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவம் மாறி பெய்த மழையின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில் பாதித்து சேதமடைந்து விட்டன.
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்திட அறுவடை ஆய்வு செய்வதை கைவிட்டு, மழை அளவை கணக்கில் கொண்டு மாவட்டம் தோறும் 100 சதவீதம் இழப்பீட்டு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல் இடுபொருள் இழப்பீடு 100 சதவீதம், அனைத்து கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.
நிபந்தனையின்றி...
கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் சீர்காழி வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விசுவநாதன், சீர்காழி ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ராஜதுரை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story