பிறதுறைகளில் வழங்கியது போல ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்க கோரி போராட்ட அறிவிப்பு - முதன்மை கல்வி அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு


பிறதுறைகளில் வழங்கியது போல ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்க கோரி போராட்ட அறிவிப்பு - முதன்மை கல்வி அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2021 5:26 PM IST (Updated: 23 Jan 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

பிறதுறைகளில் இடமாறுதல் வழங்கியது போல ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை சோதனை மற்றும் விசாரணை செய்து உள்ளே அனுப்பினர்.

மேலும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட தலைவர் மணி தலைமையில் நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சில நிர்வாகிகள் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது திடீரென அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து குறிப்பிட்ட சிலரை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அரசின் மற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதேபோல ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்பினால் ஒருவழி மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பு காரணமாகவும் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்தபட்டதாலும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story