இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் - கலெக்டர்-எம்.எல்.ஏ. நேரில் வழங்கினர்
இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் தொகையை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் வழங்கினர்.
ராமேசுவரம்,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18-ந்தேதி ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, வட்டான்வலசை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், கீழக்கரை தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் 4 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்த போது, இலங்கை கடற்படை கப்பல் அவர்களது படகில் மோதியதில், படகு மூழ்கடிக்கப்பட்டதும், 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இறந்ததும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததுடன், இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் தங்கச்சிமடத்தில் உள்ள 4 மீனவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களது குடும்பத்தினரிடம் நிவாரண நிதி தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினர்.
இதையடுத்து மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இணைந்து கலெக்டரிடம், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் உடல்களை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும், இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர் உங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார். அப்போது மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதி, மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story