நெற்பயிர்கள் பாதிப்புகள் குறித்து தவறாக கணக்கெடுப்பதாக கூறி காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா - அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்
நாகையில் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து தவறாக கணக்கெடுப்பு நடத்தியதாக கூறி காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
நாகப்பட்டினம்,
டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த நெற்பயிர்களின் பாதிப்பு குறித்து தவறாக கணக்கெடுப்பு நடத்தியதாக கூறி நாகையில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டரில் வந்த விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலகம் அருகே ஒன்று கூடினர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பேரணியாக வந்த விவசாயிகள், போலீசார் அமைத்து இருந்த இரும்பு தடுப்புகளுக்கு இடையே சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். நெற்பயிர்கள் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர் பாதிப்புகளை தவறான கணக்கெடுப்பு நடத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனம் மீதும் இதற்கு துணை போகும் வேளாண்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story