மக்களின் உற்சாகத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போது தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு


மக்களின் உற்சாகத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போது தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2021 9:44 PM IST (Updated: 23 Jan 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் உற்சாகத்தையும், எழுச்சியை பார்க்கும்போது வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதியாகி விட்டது என தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.

திருவாரூர்,

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தயாநிதிமாறன் எம்.பி. 4 நாட்கள் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று 2-வது நாளாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்தார். முன்னதாக திருவாரூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கடைவீதி வழியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் பழைய பஸ்நிலையம் அருகில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரசாரம் செய்தார்.

அப்போது தயாநிதிமாறன் பேசியதாவது:-

இங்கே கூடியிருக்கும் மக்களின் உற்சாகத்தையும், எழுச்சியையும் பார்க்கும்போது வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவது உறுதியாகி விட்டது. 10 ஆண்டுகளாக தமிழகம் இருண்டு கிடக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. திருவாரூருக்கு மாவட்டம் என்ற அஸ்தஸ்தை பெற்று தந்தது கருணாநிதி தான். அரசு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்தது தி.மு.க. தான்.

2016-ம்ஆண்டில் தலைவர் கருணாநிதியை மகத்தான வெற்றி பெற செய்தீர்கள். ஆனால் ஒரு சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்க முடியாமல் போனதால் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.

கடந்த 2 மாதங்கள் முன்பு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட 2 மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது தமிழகத்தில் கஜானா காலியாக உள்ளதாக கூறியவர், பொங்கல் பண்டிகைக்கு ரூ.2, 500 வழங்கினார். அதனை மக்களுக்காக வழங்கவில்லை. ஒட்டுக்காக வழங்கினார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நல்ல தீர்ப்பினை நீங்கள் தர வேண்டும். பணம் கொடுத்தால் தமிழக மக்களை ஏமாற்றலாம் என அ.தி.மு.கவின் எண்ணத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மதிவாணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பாலசந்திரன், சேகர், கலியபெருமாள், புலிவலம் தேவா, மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் எழுச்சியை பார்க்கிறபோது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது உறுதியாகி தெரிகிறது. ஆட்சி மாற்றம் என்பது உறுதியாக தெரிகிறது. வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

தோல்வி பயத்தால் தி.மு.க.வை பற்றி எடப்பாடி பழனிசாமி உளறுகிறார். 2021 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. இருக்காது என கூறும் எடப்பாடி பழனிசாமி அப்போது எங்கு இருக்கிறார் என்பதை முதலில் பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து திருகண்ணமங்கை, அம்மையப்பன் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்றுமாலை நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி பள்ளிவாசல் ்தெருவில் இஸ்லாமிய மக்களை தயாநிதிமாறன் எம்.பி. நேரில் சந்தித்தார்.அப்போது அங்கு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆட்சியில ்நல்ல பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம் ஆகும். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் ஓட்டுகளை பெற தேர்தலை முன்வைத்து பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி உள்ளார்.

நீட்தேர்வை எதிர்த்தவர் ஸ்டாலின். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குரல்கொடுத்தவர் ஸ்டாலின். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தி.மு.க. திகழும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராசமாணிக்கம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராணிசேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசுந்தர், ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் வடக்கு ஒன்றிய ்செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியக்குழுஉறுப்பினர் ராஜலெட்சுமிகார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாபிச்சையன், கிளை செயலாளர் ஜெயினுலாபுதீன் ்மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story