டெல்டாவை, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி - கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
டெல்டாவை, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர்கள் மணி, ரவிச்சந்திரன், தலைவர் துரை.பாஸ்கரன், கவுரவ தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில், மழையால் பாதித்த மாவட்டங்களில் அனைத்து கிராமங்களுக்கும் பாரபட்சமின்றி இடுபொருள் இழப்பீடு 100 சதவீதம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர் பாதிப்பு, அறுவடையை ஆய்வு செய்வதை கைவிட்டு மழை அளவை கணக்கில் கொண்டு மாவட்டம்தோறும் 100 சதவீதம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் அர்ச்சுணன், ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், துணைச் செயலாளர் வீரப்பன், துணைத் தலைவர் விஜயகுமார், மாநில இளைஞரணி தலைவர் அறிவு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக விவசாயிகள், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். இவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவையும் இழுத்து பூட்டி விட்டனர். இதனால் 15 நிமிடங்களுக்கு அலுவலகத்திற்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றபிறகு அலுவலக கதவு திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story