கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை: கம்பத்தில் மோப்ப நாய் மூலம் போலீசார் தீவிர வாகன சோதனை


கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை: கம்பத்தில் மோப்ப நாய் மூலம் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 23 Jan 2021 9:54 PM IST (Updated: 23 Jan 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க மோப்ப நாய் மூலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் கம்பம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலை உள்ளூர் போலீசார், போதைப் பொருள் தடுப்பு போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் மணிகட்டி ஆலமரம் மேற்குபகுதியில் கஞ்சா தோட்டம் மோப்ப நாய் வெற்றி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கம்பத்தில் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் இரவு, பகலாக ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில தினங்களில் மட்டும் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கம்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் போலீசார் மோப்பநாய் வெற்றியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சரக்கு வாகன டிரைவர்களுக்கு கஞ்சா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போலீசாரின் அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story