திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 23 Jan 2021 9:59 PM IST (Updated: 23 Jan 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை, பள்ளி சீருடை அணிந்த மாணவி மற்றும் ஒரு பெண் கையில் பையுடன் வந்தனர். பின்னர் அந்த பெண் பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். அதோடு யாரும் எதிர்பார்க்காத வகையில், பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அந்த பெண் தனது உடலிலும், மாணவி மீதும் ஊற்றியதோடு இருவரும் தீக்குளிக்க முயன்றனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். மேலும் 2 பேரையும் மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 2 பேரும், நத்தம் தாலுகா சேர்வீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கவிதா (வயது 43) மற்றும் அவருடைய மகள் மோனி‌ஷா (16) என்பது தெரியவந்தது.

மேலும் போலீசாரிடம், கவிதா கூறுகையில், எனது மகன் விக்ரம் (21) கூலி வேலை செய்கிறார். இதற்கிடையே ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், சிலருடன் சேர்த்து எனது மகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த சம்பவத்தில் என்னுடைய மகனுக்கு தொடர்பு இல்லை. மேலும் போலீஸ் விசாரணைக்கு சென்ற எனது மகன் திரும்பி வரவில்லை. எனவே எனது மகனை மீட்டு தருவதோடு, வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றார். இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகளிடம் போலீசார் அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story