திருப்பூரில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போன வழக்கில் சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
திருப்பூரில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போன வழக்கில் சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கந்தர்மணி, போலீஸ்காரர் முக்ரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற ராகுல் ராஜன் (வயது 23) என்பதும், திருப்பூர் சாமுண்டிபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் தங்கி சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி சாமுண்டிபுரம் டி.என்.சேஷன் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆடிட்டரான குமார் (55) என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றதை ராகுல் ராஜன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 தங்க சங்கிலி உள்பட 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராகுல் ராஜன் மீது திருப்பூர் மத்திய, 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story