தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - திருப்பூரில் ராகுல்காந்தி எம்.பி. பிரச்சாரம்
தமிழகத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. திருப்பூரில் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை, திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோவையில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் நேற்று மாலை 3.50 மணிக்கு அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கண்ட இடங்களில் ராகுல்காந்தி காரில் நின்றபடி பேசினார்.
அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேசி ஆங்கிலத்தில் தனது உரையை தொடர்ந்தார். அவருடைய பேச்சை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழில் மொழிபெயர்த்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களின் அன்பான, அற்புதமான வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளீர்கள். அதற்கு நன்றி. தமிழகத்தின் எதிர்காலம் நீங்கள் என்பதை நம்புகிறேன். இந்தியாவின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அழிந்து கொண்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி.யை தவறாக பயன்படுத்தியது, கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் கவனக்குறைவாக நடந்ததன் காரணமாக மிகவும் சிரமத்தை இந்தியா அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்களின் பலமாக எது இருந்ததோ, அவையெல்லாம் பலவீனமாகிக்கொண்டு இருக்கிறது.
அதற்கு காரணம் இந்த நாட்டை ஆள்பவர்களுக்கு, இந்தியாவின் நிலைமையை புரிந்து கொள்ள தயாராக இல்லை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் இவை. நம்முடைய மதம், நம்முடைய கலாசாரம் எதை நமக்கு கற்பித்துள்ளதோ அதை அவர்கள் உணரவில்லை. அதை அவர்கள் புண்படுத்துகிறார்கள். நமது கலாசாரம் என்பது மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவது தான். இவைகள் தான் தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, சிறப்பாகும்.
பிரதமரை பொறுத்தவரை ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே நடைமுறை என்பதை இந்தியாவில் புகுத்த முயற்சிக்கிறார். தமிழக அரசை பயமுறுத்துவதைப்போல், தமிழக அரசை தனது கைக்குள் வைத்திருப்பதைப்போல் தமிழக மக்களையும் நடத்தலாம் என்று நினைக்கிறார். தமிழக வரலாற்றில் இதுபோல் நடந்தது கிடையாது. தமிழக வரலாற்றை பார்க்கும்போது, தமிழக நடைமுறையை பார்க்கும்போது தமிழக மக்கள் எதிர்பார்ப்பது சுயமரியாதையை மட்டும் தான்.
தமிழக மக்களிடம் அன்பையும், மதிப்பையும் கொடுத்தால் நாம் எதை வேண்டும் என்றாலும் பெறலாம். அந்த காரணத்துக்காக, அந்த உணர்வின் காரணமாகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் இங்கே என்ன சொல்கிறேனோ அதை செய்வதற்காகத்தான் வந்துள்ளேன். நான் என்னுடைய மன்கீபாத்தை சொல்ல வரவில்லை. நான் உங்களுடைய மன்கீபாத்தை கேட்க வந்துள்ளேன். நான் உங்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக, அறிந்து கொள்வதற்காக வந்துள்ளேன். நான் உங்களுக்கு ஒரு நல்ல அரசை தர வேண்டும் என்பதற்காக ஏழை மக்களின் சாதாரண மக்களை புரிந்து கொள்ளக்கூடிய அரசு வர வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
தமிழக மக்களின், தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை தருவதற்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற உணர்வு பிரதமருக்கு இருக்கிறது. தமிழக மக்களை ஒருபோதும் அவர் விலை கொடுத்து வாங்க முடியாது என்பது அவருக்கு தெரியாது. தமிழக மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் செய்வார்கள்.
இந்தியாவின் விவசாயத்தை 5, 6 முதலாளிகளிடம் விற்று விடலாம் என்று மோடி கருதுகிறார். அதேபோல சிறு தொழில்களையும் 5, 6 முதலாளிகளிடம் கொடுத்து விடலாம் என்று கருதுகிறார். தமிழகத்தோடு எனது பாட்டிக்கும், எனது தந்தைக்கும் உள்ள உறவு பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். அவர்களை உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர் போல் நேசித்தீர்கள். நான் அதை ஒருகாலத்திலும் மறக்க மாட்டேன். அதனால் தான் நான் இங்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல் வந்திருக்கிறேன். இந்த உறவு தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த உறவு என்பது அன்பின் அடிப்படையிலும், மரியாதையின் அடிப்படையிலும் ஏற்பட்டது. தமிழக மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஒரு அரசை கொண்டு வர விரும்புகிறோம். ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்காகவும், சிறு, குறு தொழில்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பாடுபடுகிறோம்.
தமிழகத்தில் உள்ள நிலையை உயர்த்துவதற்காக நாம் உறுதிகொண்டுள்ளோம். முன்பு எப்படி தமிழகம் சிறந்து விளங்கியதோ அதுபோன்ற நிலையை கொண்டுவர முயற்சிக்கிறோம். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக முயற்சிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். சிறு, குறு தொழில்கள் செய்பவர்களிடம் இன்று (நேற்று) நான் கலந்து பேசினேன். ஏன் மத்தியில் உள்ள அரசு சில முதலாளிகளை ஊக்குவிப்பதற்காக செயல்படுகிறார்கள் என்று கேட்டார்கள். எதற்காக ஜி.எஸ்.டி.யை கட்டமைத்து இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குழப்பமான வரி விகிதத்தால் ஏழைகள், சாதாரண தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களை மாற்றுவதற்காக நாம் இங்கு வந்துள்ளோம்.
உங்களிடையே உண்மையாகவும், மரியாதையாகவும், சிறப்பானதான உறவை நான் ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் உங்களிடம் பொய் சொல்ல வரவில்லை. உண்மையை சொல்லவே நான் உங்களிடம் வந்துள்ளேன். என்னுடைய கடமை என்பது உங்களுடைய கலாசாரத்தை, உங்களுடைய நாகரீகத்தை காப்பாற்றுவதாக, பாதுகாப்பதாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் புதிய அரசை அமைப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த அரசு தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் நினைவகத்துக்கு சென்று குமரன் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் உள்ள குமரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தொகுப்பையும் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story