முசிறி அருகே சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு;ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேர் கைது: தலைவருக்கு வலைவீச்சு


முசிறி அருகே சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு;ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேர் கைது: தலைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 2:45 AM IST (Updated: 24 Jan 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே பொது பிரச்சினைக்கு மனு அளித்ததால் சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஊராட்சி தலைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

முசிறி ,

முசிறி அருகே சூரம்பட்டி கிராமம் மேற்குதெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36). சமூக ஆர்வலரான இவர் பொது பிரச்சினைகளுக்காக மாவட்ட கலெக்டர், அரசு அதிகாரிகள் என்று மனு கொடுப்பது வழக்கம். 
இதனால் சூரம்பட்டி ஊராட்சி தலைவர் கோடி, செயலாளர் கண்ணன் மற்றும் மதிவாணன் ஆகியோருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, சூரம்பட்டி பாம்பாலம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பாலாஜி, மோகன் ஆகியோர் ராமச்சந்திரனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பாலாஜி ஒருவருக்கு போன் செய்து ராமச்சந்திரன் இருக்கும் தகவலை கூறியுள்ளார். உடனே அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியும், கையிலிருந்த அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சேருகுடி கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் (32), சூரம்பட்டி ஊராட்சி தலைவர் கோடி (42), செயலாளர் கண்ணன் (44), மதிவாணன் (41), பாலாஜி (42), மோகன் (23) ஆகிய 6 பேர் மீது முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

பின்னர் அரவிந்தன், ஊராட்சி செயலாளர் கண்ணன், மதிவாணன், பாலாஜி, மோகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஊராட்சி தலைவர் கோடியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story