சுருளிப்பட்டியில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கார் எரிப்பு தொழிலாளி கைது
சுருளிப்பட்டியில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கார் எரிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்,
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 50). இவர் கம்பம் ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராக உள்ளார். இவர் சுருளிப்பட்டி அண்ணாநகர் பகுதியில் தனக்கு சொந்தமான காலி நிலத்தை டாஸ்மாக் கடை மற்றும் பார் வைப்பதற்கு வாடகைக்கு விட்டு இருந்தார். இந்த பாரை சின்னமனூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பார்அருகில் உள்ள காலி நிலத்தை மலைச்சாமி கார்ஷெட் ஆக பயன்படுத்தி வந்தார்.
மேலும் இந்த கார்ஷெட் அருகில் உள்ள காலிநிலத்தை அவர், நாராயணதேவன்பட்டியை சேர்ந்த சவுந்தரபாண்டியன்(51) என்ற கூலித்தொழிலாளிக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். கார்ஷெட்டுக்கான சாவி, மலைச்சாமியிடமும், சவுந்தரபாண்டியனிடமும் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சவுந்தரபாண்டியன் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு பார் நடத்தி வரும் நாகராஜிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் கார்ஷெட்டை திறந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மலைச்சாமியின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளமளவென எரிய தொடங்கியது.
இதுகுறித்து சுந்தரபாண்டியன் மலைச்சாமிக்கு போன் செய்து, உங்கள் கார் மீது பார் நடத்திவரும் நாகராஜ் தீ வைத்து விட்டார் என்று கூறினார். இதையடுத்து மலைச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். இதனால் கார் முழுவதும் எரியாமல் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து மலைச்சாமி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் விசாரணை செய்தனர். இதில் காருக்கு தீவைத்துவிட்டு சவுந்தரபாண்டியன் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியனை கைது செய்தனர். மேலும் அவர் ஏன் காரை எரித்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story