சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அவரிடம் பூத் முகவர்கள் பட்டியலை அளித்தனர். பின்னர் 3 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்த பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
அதன்பிறகு நிருபர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
தேர்தலை சந்திக்க தயார்
நாளைக்கே தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. சென்னை, ஆவடி, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட 37 தொகுதியை எனது பொறுப்பில் விஜயகாந்த் வழங்கி உள்ளார்.
தேர்தலில் கூட்டணி இருக்கா?, இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவு எடுத்து அறிவிப்பார். தே.மு.தி.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தற்போது வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க.தான். தமிழகத்தில் பா.ஜ.க. சின்னத்தை கொண்டு சென்றவர் விஜயகாந்த்.
தேர்தலில் போட்டி
விஜயகாந்தை காப்பதும், அவர் உருவாக்கிய கட்சியை சிறிதும் சரியாமல் காப்பதும் எனது கடமை. தேர்தல் இறுதிகட்டத்தில் அவர் பிரசாரத்துக்கு வர தயாராக உள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்கவேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து, ஆண்டவன் அருள் இருந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.
பூரண உடல் நலத்துடன்
ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தவர் சசிகலா. அவருக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது.
அவர் பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி வந்து, தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும். ஒரு பெண்ணாக அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story