கால்வாய்க்குள் குதித்த புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு - புதுப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்


கால்வாய்க்குள் குதித்த புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு - புதுப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:01 AM IST (Updated: 24 Jan 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

‘போட்டோசூட்’ எடுக்க சென்றபோது தேனீக்கள் கொட்டியதால் அவற்றிடம் இருந்து தப்பிக்க கால்வாய்க்குள் குதித்த புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். புதுப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

உப்பள்ளி,

தார்வார் மாவட்டம் உப்பள்ளி காந்திவாடா பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷி கிளமென்ட ஜங்கம்(வயது 21). இவருக்கும், வித்யாநகர் அருகே சிமெண்ட்சால் பகுதியைச் சேர்ந்த நதாஷா(வயது 20) என்ற பெண்ணுக்கும் இருவீட்டார் பெற்றோரும் திருமணம் பேசி முடித்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில் திருமண பந்தத்தில் இணைய உள்ள புதுமண ஜோடி, திருமணத்துக்கு முந்தைய ‘போட்டோசூட்’ (பிரீ-வெட்டிங் சூட்) எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் ஜோஷி, நதாஷாவும் ‘போட்டோ சூட்’ எடுக்க கிரேசூர் கிராமத்தையொட்டி உள்ள மல்லபிரபா கால்வாய்க்கு வந்துள்ளனர். அவர்களுடன் ஜோஷியின் நண்பர்களான சன்னி ஜான்வி (21), மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ராஜசேகர் (21), சல்மான் ஆகியோரும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோஷியும், நதாஷாவும் மல்லபிரபா கால்வாய் கரையோரம் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர்களிடம் நண்பர்களான சன்னி ஜான்வி, ராஜசேகர், சல்மான் ஆகியோர் விதவிதமான போஸ்களை கூறி அதுபோன்று நிற்க வைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் சேர்ந்து கால்வாய் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தின் அருகே நின்றபடி ‘செல்பி’ எடுத்தனர்.

அந்த சமயத்தில் மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த தேனீக்கள் கலைந்து செல்பி எடுத்து கொண்டிருந்தவர்களை கொட்ட தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 5 பேரும் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்கள். அப்போது அவர்களில் சல்மானை தவிர மற்ற 4 பேரும் மல்லபிரபா கால்வாய்க்குள் குதித்துள்ளனர்.

மல்லபிரபா கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது. இதனால் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என கூச்சலிட்டனர். இந்த கூச்சல் சத்தத்தை கேட்டு அந்தப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் நதாஷாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 3 பேரையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேரையும் மீட்க தீவிர முயற்சி ேமற்கொண்டனர். ஆனாலும் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு படையினர் 3 பேரின் உடல்களையும் ரப்பர் படகு மூலம் தேடினார்கள். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு படையினர் மீட்டனர். மற்றொருவரின் உடலை அவர்களால் மீட்க முடியவில்லை. மீட்கப்பட்ட 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்திரமாக மீட்கப்பட்ட நதாஷாவையும் சிகிச்சைக்காக கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலையும் தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறிது தூரத்தில் கிடந்த அந்த நபரின் உடலையும் தீயணைப்பு படையினர் கைப்பற்றினர். அவருடைய உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘போட்டோசூட்’ எடுக்க சென்றபோது, தேனீக்கள் கொட்டியதால், அவற்றிடம் இருந்து தப்பிக்க புதுமண ஜோடி ஜோஷி, நதாஷா மற்றும் சன்னி ஜான்வி, ராஜசேகர் ஆகியோர் கால்வாய்க்குள் குதித்தபோது, அவர்களில் நதாஷாவை தவிர மற்ற 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story