மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காததற்கு அரசின் செயலற்ற தன்மையே காரணம் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காததற்கு அரசின் செயலற்ற தன்மையே காரணம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் வரும் 27-ந்தேதி திறக்கப்பட உள்ள ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு புதுவையில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இதை வழங்கியது தமிழக முதல்-அமைச்சர் தான்.
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு கிடைக்காததற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் செயலற்ற தன்மையே காரணமாகும். புதுவை அரசு தமிழகத்தோடு இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
இதற்காக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வால் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கூட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. இதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காததற்கும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு தான் காரணம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி. மு.க.வின் ஆட்சி மலர்வதைப் போன்று புதுச்சேரியிலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அப்போது புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். அணி செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., மாநில இணை செயலாளர் ராஜா ராமன், மாநில துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story