அரசியல் சூழ்நிலையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எந்த நேரத்திலும் பதவியை ராஜினாமா செய்வேன் அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிவிப்பு


அரசியல் சூழ்நிலையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எந்த நேரத்திலும் பதவியை ராஜினாமா செய்வேன் அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 6:46 AM IST (Updated: 24 Jan 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சூழ்நிலையை பொறுத்து அடுத்த கட்ட முடிவை எடுப்பேன். எந்த நேரத்திலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆதரவாளர்கள் கூட்டத்தில் நமச்சிவாயம் பரபரப்பாக அறிவித்தார்.

புதுச்சேரி, 

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் நமச்சிவாயம். இவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த தேர்தலில் 15 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்த நிலையில் கட்சி மேலிடம் நாராயணசாமியை முதல்-அமைச்சராக அறிவித்தது.

இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சராக நமச்சிவாயம் பதவி ஏற்று அமைச்சரவையில் 2-ம் இடம் வகித்தார். அப்போது இருந்தே மேலிடத்துடன் அவருக்கு உரசல் இருந்து வந்தது.

புதுவை சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. பக்கம் சாய்வார் என்று ஆரூடம் கூறப்பட்டு வந்தது.

சமீப காலமாக இந்த பேச்சு புதுவை அரசியலில் பரபரப்பாக அடிபட்டு வந்தது. இதையொட்டி வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி அமைச்சர் நமச்சிவாயம் திடீரென ஆலோசனை நடத்தினார்.

இதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் அரசியலில் இருந்து ஒதுங்குவதா அல்லது மாற்று அரசியலில் ஈடுபடுவதா? என்பது குறித்து கருத்து கேட்டார்.

அப்போது அவரது ஆதரவாளர்கள், ‘நீங்கள் (அமைச்சர் நமச்சிவாயம்) எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்களுக்கு கட்டுப்படுவோம். எனவே எந்த காலத்திலும் அரசியல் ஓய்வு குறித்து கடுகளவும் யோசிக்கக்கூடாது’ என தெரிவித்தனர்.

இதையடுத்து நடந்த கூட்டத்தில் பத்திரிகை யாள ர்களுக்கு அனு மதியளிக்கப்படவில்லை. கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது :-

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நமச்சிவாயம் இருந்த போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி புதுவையில் அமைந்தது. அதன்பின் நெல்லித்தோப்பு, காமராஜ் நகர், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் மற்றும் எம்.பி. தேர்தலிலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அவர் கட்சி வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட்டார். தற்போது கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். தொகுதி மக்களுக்காக பெரிய அளவில் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. பதவி உயர்வு, பணி இடமாற்றம், முதல்-அமைச்சர் நிவாரண நிதி உதவிகூட பெற்றுத் தர முடியவில்லை.

எனவே அவரது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வது என முடிவு எடுத்துள்ளார். மேலும் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறலாமா? அல்லது மாற்று அரசியலில் ஈடுபடலாமா? என்பது குறித்து யோசித்து வருகிறார். அரசியல் சூழ்நிலையை பார்த்து அடுத்த கட்ட முடிவை அறிவிப்பேன் என நமச்சிவாயம் கூறியதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுடனும் இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story