பாதாள சாக்கடை குழிகளில் இருந்து வெளியேறி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஓடிய கழிவுநீர்


பாதாள சாக்கடை குழிகளில் இருந்து வெளியேறி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஓடிய கழிவுநீர்
x
தினத்தந்தி 24 Jan 2021 8:40 AM IST (Updated: 24 Jan 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஓடியது. துர்நாற்றம் வீசியதால் மக்கள் அவதிப்பட்டனர். தொற்றுநோய் பரவும் என அச்சப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மிக பழமையான, வரலாற்று சிறப்புமிக்க மாநகரமாகும். 51 வார்டுகளை கொண்டுள்ளது. திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாதாள சாக்கடை திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கடந்த 2000-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

முதல்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு பிறகு பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்காக சமுத்திரம் ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், 5 இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களும், 12 கழிவு நீருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியேறிய கழிவுநீர்

பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தஞ்சை மாநகரில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால் இந்த ஆள்நுழை குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.

சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப் பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தஞ்சை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.

துர்நாற்றம்

இப்படி வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையோரம் கடைகளின் முன்பு கழிவுநீர் தேங்கி நின்றதால் கடைகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையின் அருகில் உள்ள வாய்க்காலில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது.

இதேபோல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரேயும் கழிவுநீர் வெளியேறி வடிகாலில் தேங்கி நிற்கிறது. தஞ்சை மருத்துவக்கல்லூரி 3-வது நுழைவு கேட் எதிரே உள்ள வீதியிலும் கழிவுநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இப்படி பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி கொண்டு இருப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

மேலும் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய சாக்கடை குழாய்களை இணைக்கும் தொட்டிகளில் இருந்தும் கழிவுநீர் வெளியேறுவதால் பாலாஜிநகரில் சில கடைகளை திறக்க முடியவில்லை. வீடுகளின் கழிவறைகளிலும் கழிவுநீர் தேங்கி நின்றதால் துர்நாற்றத்துடன் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக அடைப்பை சரி செய்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்துவிட்டதோ? என நினைக்க தோன்றுகிறது. இந்த திட்டம் தொடங்கப்படும்போதே எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு பிரதான குழாய்களை பெரிய குழாய்களாக பதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறிய குழாய்களாக பதித்துவிட்டனர். வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீரை கொண்டு வருவதற்காக போடப்பட்டுள்ள இணைப்பு குழாய்களை விட கொஞ்சம் பெரிய அளவில் தான் போடப்பட்டு இருப்பதால் கழிவுநீர் பிரதான குழாய்கள் வழியாக செல்ல சிரமமாக இருக்கிறது. இதனால் சிறிய அடைப்பு ஏற்பட்டால் கூட உடனே கழிவுநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. எந்த திட்டமிடலும் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல இடங்களில் சாக்கடை குழாய் இணைப்பு தொட்டிகள் நிரம்பி, கழிவு சாலையில் வெளியேறி வருகிறது. எனவே இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றனர்.

Next Story