பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் 200 வாழைகள் நாசம்


பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் 200 வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 24 Jan 2021 11:22 AM IST (Updated: 24 Jan 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் 200 வாழைகள் நாசம் அடைந்தன.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து (வயது 58) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு உள்ளார். வாழை மரங்கள் தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

அகழி வெட்ட கோரிக்கை

இந்நிலையில் நேற்று அதிகாலை பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 யானைகள் காளிமுத்துவின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. சுமார் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து காளிமுத்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இப்பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால், வனத்தை விட்டு யானைகள் வெளியே வராமல் தடுக்க வனப்பகுதியை ஒட்டி அகழி வெட்ட வேண்டும் என்று பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story