மதுரை மின்வாரிய பணியாளர் அடித்துக்கொலை- சக ஊழியர் கைது
மதுரையில் மின்வாரிய பணியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை பொட்டபாளையத்தை சேர்ந்தவர் அழகுமலை (வயது 54). இவர் மதுரை அனுப்பானடி மின்வாரிய நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் இரவு பணியில் இருந்தார்.
மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர், பிச்சை. இவர் அனுப்பானடி துணை மின் வாரிய நிலையமான சிந்தாமணி மின் வாரிய நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அழகுமலையும், பிச்சையும் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது பிச்சை ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டையை எடுத்து அழகுமலையை தலையில் சரமாரியாக தாக்கியதாக தெரியவருகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே பிச்சை அனுப்பானடி மின்வாரிய அதிகாரிகளுக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். மேலும் அழகுமலையின் உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சு ஊழியர்கள் அழகுமலையை பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் அவனியாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அழகுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியர் பிச்சையை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story