வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாப சாவு


வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 25 Jan 2021 4:00 AM IST (Updated: 24 Jan 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவமனைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாத்தனூர் கிராமம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சின்னகுழந்தையும (வயது 56). அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி பச்சையம்மாளும் (35) உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இருவரும் கிராமத்தில் இருந்து பஸ்சில் வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் சிகிச்சை மையத்துக்கு வந்தனர். அங்கு, சிகிச்சை முடிவதற்கு இரவு 9 மணியாகி விட்டது, ஊருக்கு திரும்ப வேண்டிய நிலையில் கடைசி பஸ்சும் சென்று விட்டது.

உடனே சின்னகுழந்தை தனது மகன் சங்கருக்கு போன் செய்து, தங்களை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறி உள்ளார். அதன்படி சங்கர் தனது மோட்டார்சைக்கிளில் வந்தவாசிக்கு வந்து இருவரையும் கிராமத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பாதிரி கூட்ரோடு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் திடீரென இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டது.

இதில் சின்னகுழந்தை, பச்சையம்மாள் மற்றும் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற சங்கர் ஆகிய 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் வந்தவாசி வடக்குப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் வழியிலேயே சின்னகுழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர். பச்சையம்மாளுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

உத்தரமேரூர் பகுதியில் சென்றபோது, பச்சையம்மாளும் இறந்து விட்டார். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைத்தனர்.

 இந்த விபத்து குறித்து வந்தவாசி வடக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மருத்துவமனைக்கு சென்று திரும்பியபோது விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story