வீடு, வீடாக சின்னங்கள் வரைவதில் கட்சியினர் இடையே போட்டி


வீடு, வீடாக சின்னங்கள் வரைவதில் கட்சியினர் இடையே போட்டி
x
தினத்தந்தி 24 Jan 2021 8:20 PM IST (Updated: 24 Jan 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம்தொகுதியில் கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர்களில் கட்சி சின்னங்கள் வரைவதில் போட்டி நிலவுகிறது.

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் இறுதிபட்டியல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வெளியிட்டுஉள்ளது. மேலும் 1000 வாக்காளர்கள் வீதம் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிரம் காட்டிவருகிறார். தேர்தலுக்கு அச்சாணியாக மக்கள் கிராமசபை கூட்டத்தின் வழியே தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார்.

இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்நோக்கி களம் இறங்கி உள்ளது. கட்சி தலைவர்கள் அதிதீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதிலும் அதன் ஒரு படிமேலாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி முழுவதுமாக அ.தி.மு.க. புறநகர்கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடத்தி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை தயார்படுத்தி உள்ளார். தற்போதே அ.தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் படலத்தில் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீட்டுக்குவீடு சுவர்களில் அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னம் வரைந்து இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னமான குக்கர் சின்னத்தை வரைவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீட்டின் சுவர்களில் இடைவெளி இன்றிஇரட்டை இலையும், குக்கரும் போட்டி, போட்டு வரையப்பட்டு உள்ளன. இதன் மூலம் தற்போதே திருப்பரங்குன்றம் தொகுதியில் விறுவிறுப்பாக தேர்தல் களம் களை கட்டுகிறது.

Next Story