வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை - அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்


வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை - அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jan 2021 9:02 PM IST (Updated: 24 Jan 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்பு துறை மூலம் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மதுரை,

மதுரை மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் சார்பில் மதுரை கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அதில் மொத்தம் 5 ஆயிரத்து 678 பேர் கலந்து கொண்டனர். அதில் 855 பேர் பணி ஆணைகளை பெற்றனர். அதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை மாநிலஅளவில் அரசுத்துறையில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 369 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தனியார் துறையில் 7 லட்சத்து 36 ஆயிரத்து 439 பேர் சேர்ந்துள்ளனர். ஆக மொத்தம் 10 லட்சத்து 61 ஆயிரத்து 808 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் மதுரை மாவட்ட அளவில் அரசுத்துறையில் 2 ஆயிரத்து 832 பேருக்கும், தனியார் துறையில் 5 ஆயிரத்து 896 பேருக்கும் என 8 ஆயிரத்து 728 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 63 லட்சத்து 80 ஆயிரத்து 829 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 99 ஆயிரத்து 989 பேர் பதிவு செய்து உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை மாநில அளவில் 1 கோடியே 3 லட்சத்து 83 ஆயிரத்து 466 பேருக்கு தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை ஜெயலலிதா இருமடங்காக உயர்த்தி வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநில அளவில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 581 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த 87 முகாம்களில் 28 ஆயிரத்து 892 பேர் கலந்து கொண்டனர். அதில் 925 நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரத்து 57 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்த முகாம் நடத்த முடியாமல் இருந்தது. எனவே இணையதளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இணையதளத்தில் மாநில அளவில் 91 ஆயிரத்து 765 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 16 ஆயிரத்து 760 பேருக்கு 3 ஆயிரத்து 53 நிறுவனங்கள் மூலம் வேலை வழங்கப்பட உள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்து 222 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 764 பேருக்கு 125 நிறுவனங்கள் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 1, 746 உதவியாளர்கள், 9 ஆயிரத்து 560 விற்பனையாளர்கள், 1, 933 கட்டுனர்கள் உள்பட 13 ஆயிரத்து 532 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் மதுரை மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story