நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


நாமக்கல், குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 10:05 PM IST (Updated: 24 Jan 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மத்திய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல குமாரபாளையம், பள்ளிபாளையத்திலும் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்ட முன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு எல்.பி.எப். கவுன்சில் தலைவர் பழனியப்பன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தம்பிராஜா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. மாநில துணை தலைவர் விஸ்வநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு ரோட்டில் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஜானகிராமன், தொ.மு.ச. சார்பில் செல்வம், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நஞ்சப்பன், கார்த்தி, எச்.எம்.எஸ். சார்பில் செல்வராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம் பஸ் நிலைய நால்ரோட்டில் நேற்று மாலை தொழிற்சங்கங்களின் சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அசோகன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி, கவிராஜ், வெங்கடேசன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Next Story