திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை கிராமத்தில் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வகுப்புகளை புறக்கணித்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள்
நெல்லிவாசல்நாடு கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி 3 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்ததால் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாடு கிராமத்தில் வனத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெல்லிவாசல்நாடு, சேம்பரை, மலையாண்டிபட்டி, மலை திருப்பத்தூர், மேல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 266 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டு கடந்த 19-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்கிறது. இப்பள்ளியில் 10-ம் வகுப்பில் 64 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ்-1 படிப்பதற்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதூர்நாடு மேல்நிலைப்பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும். இதனால் 10-ம் வகுப்பு முடிக்கும் பல மாணவ, மாணவிகள் மேல்நிலை வகுப்பை தொடர மனமில்லாமல் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் நெல்லிவாசல்நாடு பள்ளியை தரம் உயர்த்தினால் மலைப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை இப்பள்ளியை தரம் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவ-மாணவிகள் கடந்த 3 நாட்களாக பள்ளி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். ஆனால் அவர்களை சந்திக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை.
நேற்று 4-வது நாளாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பள்ளியை தரம் உயர்த்தும் வரை வகுப்புகளுக்கு செல்லப்போவதில்லை எனக் கூறி அனைவரும் அவரவர் வீடுகளுக்்கு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கூறுகையில், ‘‘எங்களது போராட்டம் தெரிந்தும் மாவட்ட நிர்வாகமோ, கல்வித்துறை அதிகாரிகளோ இப்பகுதிக்கு வரவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் எங்களுக்கு ஏமாற்றைத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிகள் இங்கு வந்து பள்ளி தரம் உயர்த்தப்படும் என்ற உறுதிமொழி தந்தால் மட்டுமே நாங்கள் பள்ளிவருவோம் எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். பள்ளி மாணவர்களின் இந்த அதிரடி போராட்டம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story