6 நாட்கள் சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல் திண்டிவனத்தில் போலீசார் நடவடிக்கை
தேசிய தெய்வீக யாத்திரை மேற்கொண்ட கருணாஸ் எம்எல்ஏவின் வாகனத்தை திண்டிவனத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்,
6 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து தேசிய தெய்வீக யாத்திரை மேற்கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ. வின் வாகனத்தை திண்டிவனத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முக்குலத்தோர் புலிகள் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேசிய தெய்வீக யாத்திரை என்கிற பெயரில் 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து நேற்று தொடங்கினார். அப்போது, யாத்திரை வாகனம் உள்பட 6 வாகனங்களில் அவர்கள் அணிவகுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்த அவரது காரை, போலீசார் வழிமறித்தனர். தொடர்ந்து, கருணாஸ் எம்.எல்.ஏ.வின் காருக்கு முன்னும், பின்னும் போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தினர்.
இதுபற்றி போலீசாரிடம் கருணாஸ் எம்.எல்.ஏ. கேட்ட போது, உங்களுக்கு யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, யாத்திரைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் கைப்பற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
இதை கண்டித்து, அவருடன் வந்த தொண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முறையாக அனுமதி பெற்று அந்த வாகனத்தை பெற்றுக் கொள்வதாக போலீசாரிடம் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறிவிட்டு அங்கிருந்து தனது காரில் உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் நந்தவனம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறநகர் பகுதி வழியாக உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்கள் சுற்றுபயணமாக சென்றேன். மதுரையில் எனது சுற்றுப்பயணத்தை முடிக்க திட்டமிட்டு இருந்தேன்.
இந்த பயணத்தின் போது, இளைஞர்களை சந்திப்பது, முக்குலத்தோரின் முக்கிய கோரிக்கையாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசிக்க இருந்தேன்.
இதற்காக அனுமதி கேட்டு காவல்துறை தலைவரிடம் கொடுத்துள்ளேன். ஆனால், என்னுடன் வரும் வாகனத்தில் தேசிய தெய்வீக யாத்திரை என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளதால் அது இருக்கக் கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் எங்களை திண்டிவனத்தில் காவல் துறையினர் தடுத்துள்ளனர்.. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு இருந்தும் எங்களை போலீசார் தடுத்து நிறுத்தியிருப்பது முக்குலத்தோர் சமுதாயத்தையே அவமதிப்புக்கு உள்ளாக்குவதாகும்.
ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் சசிகலா ஆவார். இதனால் சசிகலா மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அவர் உடல் நலம் பெற்று வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் சிகிச்சை முடிந்து வந்ததும், நேரில் சந்திப்பேன். தற்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளோம். அதற்காகத்தான் எங்களை நடுரோட்டில் நிற்க வைத்து உள்ளனர்.
முதல்-அமைச்சரை நான் எதுவும் தவறாக பேசவில்லை. எனது 6 நாள் பயணம் முடிந்ததும் எங்களது கோரிக்கை அடங்கிய மனுவை முதல்-அமைச்சரை சந்தித்து கொடுக்க உள்ளேன். அரசு இந்த சமுதாயம் சார்ந்த மக்களின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்கவேண்டும் என்றார் அவர்.
Related Tags :
Next Story