தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன் தான்: தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேச்சு


தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன் தான்: தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 11:13 PM IST (Updated: 24 Jan 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான் என்று ஊத்துக்குளியில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசினார்.

திருப்பூர்:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. "வாங்க ஒரு கை பார்ப்போம்" என்ற தலைப்பில் நேற்று முன்தினம் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஊத்துக்குளி பஸ் நிறுத்தத்திலும், காங்கேயம் பஸ்நிலைய பகுதியிலும்  ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் வணக்கம். நான் இங்கே வருவதற்கு மிகவும் பெருமை அடைகிறேன். இந்த நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் துரதிருஷ்டவசமாக நல்லபடியாக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஒரு ஆட்சி நடக்கிறது. ஆனால் டெல்லியில் ஆட்சி நடத்துகிறவர்கள் தமிழ் கலாசாரத்திற்கும், தமிழ் பண்பாட்டுக்கும் மரியாதை செலுத்தவில்லை. தமிழில் பேசுவதால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

வரலாற்றையும், கடந்தகால நிகழ்வுகளையும் தெரிந்தவர்களுக்கு தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது என்பது புரியும். தமிழக மக்களின் நல்லெண்ணத்தோடு தான் நல்ல காரியத்தை செய்ய முடியும். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். எனது பாட்டி இந்திரா காந்திக்கும், எனது தந்தை ராஜீவ் காந்திக்கும் நீங்கள் காட்டிய மரியாதை எனக்கு தெரியும். நான் உங்களில் ஒருவன். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு பையன்.

நான் உங்களுக்கு அறிவுரை சொல்வதற்காக இங்கு வரவில்லை. உங்களை சந்தித்து உங்களுடைய குறைகளை தெரிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக என்னை நான் அர்ப்பணிக்க வந்துள்ளேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தில் இருக்கிறவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு இருக்கும் பெருமையும், பண்பாட்டின் சிறப்பையும் அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

நான் தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர, நானும் ஒரு தமிழன் தான். மோடி தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டு அவர் வெற்றிகரமாக செல்ல முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உங்கள் வீட்டு பிள்ளை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கிறது. வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஆனால் தமிழக மக்களாகிய நீங்கள் இன்னும் வாழ்க்கையில் வளம் பெறாமல் இருக்கிறீர்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது.

தமிழக மக்களை வாட்டி கொண்டிருப்பது பணமதிப்பிழப்பு, பெட்ரோல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. என்ற வரி உங்களை நசுக்கி வருகிறது. உங்கள் வளமான வாழ்க்கையை கெடுத்துக்கொண்டிருக்கிறது.
புதிய வேளாண்மை சட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு 5 பெரிய முதலாளிகளுக்கு, அவர்கள் இன்னும் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறது.

தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எதிர்காலத்தில் வாழ்க்கை வளமாக வேண்டும் என்பதற்காக நானும், காங்கிரஸ் கட்சியும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தை ஆளுகின்ற மோசமான ஆட்சியை மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைத்தால் நல்ல பல காரியங்கள் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

ஊத்துக்குளி நெய்க்கும், வெண்ணெய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பது எனக்கு தெரியும். இந்த நாட்டிற்கு நீங்கள் நெய்யையும், வெண்ணையையும் கஷ்டப்பட்டு தருகிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது உங்களை நினைத்து பெருமை அடைகிறேன். 

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தும் அளவுக்கு கேவலமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளை கூட கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். சீன ராணுவம் நமது பகுதிக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அதை கண்டிக்க துப்பில்லாத பிரதமரை நாம் பெற்றுள்ளோம். 

இதற்கு முன்னால் நமது பிரதமர் ஒரு பொய்யை குறிப்பிட்டார். இந்தியாவுக்குள் யாரும் நுழைய முடியாது என்று சொன்னார். நாட்டில் இப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக டெல்லியில் உள்ள அரசு இருக்கிறது. பிரதமர் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசை போலி முகமூடிக்கு பின்னால் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் கலாசாரத்தையும், பண்பையும் அறியாதவர் மோடி.

தமிழ் கலாசாரத்தையும் தமிழ் மொழியையும் யாரும் ஏமாற்ற முடியாது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நாட்டிலேயே ஒரே கொள்கை இருக்க வேண்டும் என்கிறாா் பிரதமர். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய இந்தியா ஏன் ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மொழிகளுடன் இருக்கவேண்டும். தமிழக இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. உங்களுடைய சிப்பாயாக, உங்களுடைய உழைப்பாளியாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும். 

அனைவருக்கும் வணக்கம். நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கேயத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்த பகுதிக்கு அருகே காங்கேயம் காளை நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இருந்து இறங்கி சென்ற ராகுல் காந்தி அந்த காளையை பார்வையிட்டார். பின்னர் ஊதியூரில் அவருக்கு மலர்தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு காங்கிரசார் வரவேற்றனர். அவர்களுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.

Next Story