கரூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம்
கரூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி விட்டனர். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 'ஒரு கை பார்ப்போம்' என்ற பெயரில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
இதையடுத்து முதல் நாள் பிரசாரத்தை கோவையில் தொடங்கினார். அங்கு கோவை அவிநாசி சாலை, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். நேற்று 2-வது நாளாக திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) கரூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து வேன் மூலம் கரூர் மாவட்டத்திற்கு வருகிறார். காலை 9 மணிக்கு கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசுகிறார்.
காலை 10 மணிக்கு கரூர் பஸ்நிலைய ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு, ராகுல்காந்தி மாலை அணிவித்து பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு கரூர் வாங்கல் மாரிகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். இதற்காக அங்கு சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் 12.30 மணிக்கு மதிய உணவு அருந்துகிறார்.
அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு அரவக்குறிச்சி ஏ.வி.எஸ். கார்னரிலும், 1.45 மணிக்கு பள்ளப்பட்டி ஷாநகர் கார்னர் பகுதியிலும் பொதுமக்கள் முன்னிலையில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
ராகுல்காந்தி கரூர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில், 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மதியம் 2.30 மணிக்கு பள்ளப்பட்டியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூருக்கு தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி செல்கிறார்.
Related Tags :
Next Story