திருப்பூரில் சாய ஆலையில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பூரில் சாய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
திருப்பூர்;
திருப்பூர் அவினாசி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் குமார், சேகர். இவர்கள் ராயபுரம் ஸ்டேட் பாங்க் காலனியில் சாய ஆலை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்ததால், அதிகளவு துணிகளுக்கு சாயமேற்ற ஆர்டர்கள் பெற்று, அந்த துணிகள் அனைத்தும் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்தின் அருகே உள்ள அறையில் சில தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். மாலை 3 மணி அளவில் சாய ஆலையில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இது குறித்து உரிமையாளர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே நிறுவனத்தின் மேற்கூரை மற்றும் உள்ளே இருந்த துணிகள் அனைத்தும் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கின. உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்ட எந்திரங்களிலும் தீப்பிடித்து எரியத்தொடங்கின. தொடர்ந்து இது குறித்து உடனடியாக வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் 2 வாகனத்தில் 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். துணிகள் என்பதால் தீயை அணைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து விடுமுறை நாளில் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story