நிலவுக்கு நன்றி தெரிவித்து விடிய, விடிய கும்மியடித்து பெண்கள் கொண்டாட்டம்


நிலவுக்கு நன்றி தெரிவித்து விடிய, விடிய கும்மியடித்து பெண்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2021 1:26 AM IST (Updated: 25 Jan 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நிலவுக்கு நன்றி தெரிவித்து பெண்கள் விடிய விடிய கும்மியடித்து கொண்டாடினார்கள்.

பவானி

பவானி அருகே உள்ள லட்சுமி நகர் திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் பெண்கள் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் முடிந்ததும் நிலவுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் பெண்கள், சிறுமிகள் தங்கள் வீட்டில் இருந்து உணவு பண்டங்கள், பதார்த்தங்களை சமைத்து தெருவில் உள்ள ஒரு இடத்துக்கு கொண்டு வந்தனர்.

கும்மியடித்தனர்...

பின்னர் அங்கு சந்தனத்தாலும், சாணத்தாலும் விநாயகர் உருவத்தை பிடித்து கீழே வைத்து அதை சுற்றி பெண்களும், சிறுமிகளும் கும்மியடித்து ஆடி, பாடி கொண்டாடினார்கள். அதைத்தொடர்ந்து அனைவரும் தரையில் உட்கார்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவும் அதேபோல் பெண்கள் தெருவில் ஒன்று கூடினார்கள். தாங்கள் பிடித்த விநாயகர் உருவம் மற்றும் மாவிளக்குகள், முளைப்பாரிகளை கீழே வைத்து அவற்றை சுற்றி கும்மியடித்து ஆடி, பாடினார்கள். நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய இந்த கொண்டாட்டம் நடந்தது.

வாழைமட்டை தேர்

தொடர்ந்து வாழை மட்டையால் தேர் செய்து, அதில் விநாயகரை வைத்து பவானியில் உள்ள காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்றனர். அங்கு, விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டு ஆற்றில் விட்டனர். அப்போது பெண்கள், எங்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வையும், வளத்தையும், நல்ல உடல்நலத்தையும் கொடுக்க ேவண்டும் என்று வேண்டிக்கொண்டனர். பின்னர் ஒரிடத்தில் உட்கார்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பகிர்ந்து கொடுத்து உண்டனர். அதன்பின்னர் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்று  விட்டனர்.

Next Story