சிறுத்தை நடமாட்டம்: பேகூரில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியே வர வேண்டாம் வனத்துறை அதிகாரிகள் உத்தரவு
பெங்களூருவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பேகூரில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேகூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு சிறுத்தை சுற்றி திரிந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாடியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அடுக்குமாடி குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் குடியிருப்பு வாசிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர், உளிமாவு போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். குடியிருப்பின் வாகனம் நிறுத்தும் பகுதி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆனால் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை.
அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிறுத்தை வந்து விட்டு, அப்படியே திரும்பி சென்றிருப்பதாகவும், உணவுக்காக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பையொட்டியே ஏரி மற்றும் வனப்பகுதி உள்ளது. இதனால் அந்த வனப்பகுதி அல்லது பன்னரகட்டா வனப்பகுதியில் இருந்து அந்த சிறுத்தை வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அடுக்குமாடி கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை காலடி பதிவாகி இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் குடியிருப்பையொட்டி உள்ள பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் பீதி காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பில் சிறுத்தை சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்பு வாசிகள் பீதி அடைய வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story