சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு தேர் வடம் பிடிக்க அனுமதி மறுப்பு
வருகிற 28-ந் தேதி நடக்கும் சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை
வருகிற 28-ந் தேதி நடக்கும் சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க திருவிழா முதலில் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேரோட்டத்தை நடத்த ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, பகல் மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு சமூகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்
நேற்று இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.
முககவசம் அவசியம்
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தேர் வடம் பிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் வரும் பக்தர்கள் தேர் வடம் பிடிக்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மண்டப கட்டளைதாரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு 8.30 மணிக்குள் கட்டளை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருவிழா நாட்களில் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.மேலும் இந்த ஆண்டு சாமி ஊர்வல புறப்பாடு நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story