சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்; நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு


சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்; நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
x
தினத்தந்தி 24 Jan 2021 10:32 PM GMT (Updated: 24 Jan 2021 10:33 PM GMT)

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மாரியம்மன் கோவில்
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருநாளான நேற்று காலை அம்மன் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 
மாலையில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சமயபுரம் வந்திருந்தனர். அவர்களில் பலர் முடிக்காணிக்கை செலுத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் முன்புறம் நெய்விளக்கு ஏற்றும் இடத்திலும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.
நீண்ட வரிசை
தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்குவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம், துறையூர் போன்ற பகுதிகளிலிருந்து வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள்  உள்ளிட்ட வாகனங்களை புதிய பஸ்நிலையம் வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.

Next Story