சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சங்கரன்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை படத்தில் காணலாம்.
x
சங்கரன்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 25 Jan 2021 4:09 AM IST (Updated: 25 Jan 2021 7:34 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் சங்கரன்கோவில் கோவில் வாசலில் வளையல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுசீலா (வயது 55). இவர் தினமும் மதியம் சாப்பிட்டு விட்டு தன் கணவரை சாப்பிட மாற்றி விடுவதற்கு, வடக்குவீதி வழியாக கோவில் வாசலில் உள்ள கடைக்கு செல்வது வழக்கம். 
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மதியம் சுசீலா வடக்கு ரத வீதி வழியாக கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் தலையில் ஹெல்ெமட் அணிந்தவாறு அமர்ந்து இருந்தனர். 

சங்கிலி பறிப்பு
அப்போது, திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் சுசீலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலா சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். 

கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் சுசீலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சங்கிலி பறிப்பு தொடர்பாக காட்சி பதிவாகி உள்ளது. அதன் மூலம் மர்ம நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story